வியாழன், 9 ஆகஸ்ட், 2018

​ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் சிசிடிவி கேமராக்கள் மூலம் 4000 குற்றவாளிகள் கண்டுப்பிடிப்பு! August 5, 2018

Image

சீனாவில் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை மிகுந்த வரவேற்பபை பெற்றுள்ளது. இருப்பினும் தெருவில் நடமாடும் மனிதர்கள் அனைவரையும் குற்றவாளிகள் கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரியா என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. அது என்ன ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் சிசிடிவி காமிரா என்பவர்களுக்கான தொகுப்பு.

எதிர்வரும் ஆண்டுகளில் மனித சமூகம் தொழில் நுட்ப புரட்சியால் பெரும் சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்திருக்கும். அப்போது அதில் முக்கிய பங்கு வகிக்க போவது ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெக்வி என்ற நிறுவனமும் சென்ஸ்டைம் என்ற நிறுவனமும் தனது புதிய தயாரிப்புகள் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றன. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் அவர்களின் முக அடையாளங்களை கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றவாளிகளை கண்டறியும் புதிய தொழில் நுட்ப கேமராக்களை இந்த நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன .

சிசிடிவி கேமராக்களில் face ++ என்ற முகத்தை அடையாளம் காணக்கூடிய  மென்பொருள் பொருத்தப்பட்டிருப்பதால் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களை காவல்துறையினர் கைது செய்ய எளிதாகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம்  முகத்தோற்றத்தை மட்டும் வைத்து 106 வகையாக குற்றவாளிகளை கண்டறிய முடியும் முகத்தின் ஒரு பகுதியை மூடி இருந்தால் கூட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்கின்றனர் மெக்வி நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள்.

சீனாவின் 16 முக்கிய நகரங்களில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் பொது இடங்களில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு இதுவரை 4ஆயிரம் குற்றவாளிகளை சீன காவல்துறை கைது செய்துள்ளது. இது வரை இந்த கேமராக்கள் முகத் தோற்றத்தை வைத்து குற்றவாளிகளை  97 சதவிதம் துள்ளியமாக கண்டறிந்துள்ளது.


இதன் அடுத்தகட்டமாக ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் மூக்கு கண்ணாடிகள் (power glasses) அறிமுகமாகி உள்ளன. தற்போது சீனாவில்  ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், face ++   மென்பொருளுடனான ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் மூக்கு கண்ணாடிகளை அணிந்துள்ளனர். இது கூட்டநெரிசலில் குற்றவாளிகள் கண்டறிய உதவுகிறது . முதன் முதலில் இந்த ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகள் குறித்த சோதனை தெற்கு சீனாவில் 60 ஆயிரம் பேர் கூடிய இசை நிகழ்ச்சியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 


தற்போது அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவேட்டை உறுதிபடுத்த கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. வருங்காலங்களில் இது மாற்றப்பட்டு அலுவலகங்களில்  face ++  மென்பொருளுடனான ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் சிசிடிவி கேமராக்கள் மூலம் பணியாளர்களின் வருகையை கூட உறுதிபடுத்த முடியும் என்பதால் சர்வதேச சந்தையில் இதற்கான மதிப்பீடு உயர்ந்திருக்கிறது. சீனா இந்த தொழில் நுட்பத்தில் முன்னோடியாக இருக்கிறது. ஆனால் இப்படி சந்தேகத்தோடே எப்போதும் ஒரு அரசு தனது குடிமக்களை கண்காணித்துக் கொண்டே இருப்பது சரியாகுமா என்ற கேள்வி? நியுயார்க் டைம்ஸில் எழுப்பப்பட்டுள்ளது .

கூடவே அமெரிக்காவில் பயங்கரவாதிகள் மற்றும் கூலிப்படைகள்  இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் கொல்ல வேண்டியவர்களை அடையாளம் காணப்பட்டதையும் சுட்டிக் காண்பித்துள்ளது. காலங்களுக்கேற்ப தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதை யார் பயன்படுத்துகிறார்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது தொழில் புரட்சியின் மகத்துவம்.