
ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் நடைமுறை வரும் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் கணிப்பொறி மூலம் இந்த தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த நடைமுறையை 2019ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்த சாத்தியம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சகம் அளிக்கும் நெருக்கடியையடுத்து நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதை வரும் 2019ம் ஆண்டிலேயே நடைமுறைபடுத்த வேண்டும் என்கிற முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மறுபரிசீலனை செய்துவருகிறது. எனவே வரும் 2019ம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.