ஞாயிறு, 30 ஜூன், 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு ரத்தத்தால் கோரிக்கை மனு அளித்துள்ள விவசாயிகள்! June 30, 2019

Image
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு ரத்தத்தால் கைரேகை வைத்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 
தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் பாதிப்படையும் என அரியலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
இதனை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சருக்கு ரத்தத்தால் கைரேகை வைத்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். மக்கள் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டேன் என ஏற்கனவே உறுதியளித்துள்ள முதலமைச்சர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
credit ns7tv

ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் June 30, 2019

Image
ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்க மத்திய அரசு முயல்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈடுபடுவது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என விமர்சித்துள்ளார். 
பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என குறிப்பிட்டுள்ள அவர், அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என தெரிவித்துள்ளார். இதேபோல், நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டுகளை தேர்வு செய்யும் உரிமையையும் மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

credit  ns7,tv

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவோருக்கான உணவு பட்ஜெட்டில் இனி பாகுபாடில்லை! June 30, 2019

credit ns7.tv
Image
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவோருக்கான உணவு பட்ஜெட்டில் இனி பாகுபாடு காட்டப்படாது என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு அறிவித்துள்ளார்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான Sports Authority of India-வில் (SAI) பயிற்சி பெறும் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர், வீராங்கனைகளுக்கான உணவு பட்ஜெட் தற்போது முறையே ரூ.250, ரூ.480 மற்றும் ரூ.690 ஆக உள்ளது. இந்த தொகையினை பாகுபாடின்றி சமமாக இனி வழங்கப்போவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான கிரன் ரிஜுஜு கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிரன் ரிஜுஜு கூறுகையில், அண்மையில் பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள தேசிய விளையாட்டு மையத்திற்கு சென்றிருந்த போது அங்கு நான் உணவு உட்கொண்டேன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயிற்சி பெறும் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர், வீராங்கனைகள் என இரு தரப்பினரும் வேறு வேறு வகையான உணவுகளை உட்கொள்வதையும் கண்டேன், அவர்களின் உணவு பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதே இதற்கு காரணமாக இருந்தது.
ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்கு அடிப்படையே உணவு தான் எனும் போது எந்த ஒரு வீரராலும் போதுமான உணவில்லாமல் உலக சாம்பியனாக வர இயலாது. ஒரு வீரரின் திறனை பொறுத்து அவருக்கான உணவு கொடுக்கப்படக் கூடாது என்பதால் வீரரின் உணவை பட்ஜெட் தீர்மானிக்கக்கூடாது.
எனவே நாடு முழுவதும் SAI மையங்களில் பயிற்சி பெறும் வீரர்களின் உணவு பட்ஜெட்டில் இனி முரண்பாடோ, பாகுபாடோ இருக்கக்கூடாது என்று விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என குறிப்பிட்ட கிரன் ரிஜுஜு இந்த மையத்தில் உள்ள சமையலைறைகள் நவீன வசதிகள் கொண்டதாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கிரன் ரிஜுஜுவின் இந்த அறிவிப்பின் மூலம் SAI மையங்களில் பயிற்சி பெறும் 12,500 வீரர்கள், வீராங்கனைகள் பலனடைவர். இதற்காக கூடுதலாக 150 கோடி ரூபாயையும் அமைச்சர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 ஜூன், 2019

மேற்குவங்கத்தில் இருந்து ஒலிக்க தொடங்கிய ‘திராவிடம்’ என்ற குரல்...! June 29, 2019

credit ns7.tv
Image
தமிழகத்தை தாண்டி திராவிடம் என்ற குரல் மேற்குவங்கத்தில் இருந்து ஒலிக்க தொடங்கியுள்ளது. மாநிலங்களவையில் ஒலித்த அந்த குரல் யாருடையது?
கடந்த 27ம் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகந்து சேகர் ராய் , மேற்கு வங்காளம் என்ற பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு அவர் மேற்கோள் காட்டிய விவகாரம் தான் தற்போது தமிழகத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக ஆரியம், திராவிடம் என்ற இரண்டு சித்தாந்தகளுக்கு இடையிலான மோதல் ஏற்படும் போதெல்லாம், அதனை வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் இடையிலான மோதலாக மாற்றுவது வாடிக்கை. ஆனால் இந்த முறை திராவிட பாரம்பரியம் என்ற குரல் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து ஒலித்துள்ளது. 
பங்களா என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு காரணம் கூறும் சுகந்து சேகர் ராய், திராவிட பாரம்பரியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட குடும்பத்தை சேர்ந்த பங்கா என்ற மலைவாழ் மக்கள் வங்கத்தில் குடியேறியதாகவும் அவர்கள் தான் மேற்குவங்கத்தின் பூர்வ குடிகள் என்றும் கூறுகிறார் சுகந்து சேகர் ராய். அதற்கு உறுதுணையாக தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள திராவிட உத்கல பங்கா என்ற வரியையும் மேற்கோள் காட்டுகிறார் அவர்.
சுகந்து சேகர் ராயின் வார்த்தைகளை எளிதாக கடந்து சென்று விட முடியாது. காலம் காலமாக இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிடர்கள் என்ற குரல் ஒலித்து கொண்டிருப்பதன் தொடர்ச்சி தான் இது. சிந்து சமவெளி நாகரித்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஆய்வு முடிவுகளை அவ்வபோது முன்னிறுத்துகின்றனர் வரலாற்றாய்வாளர்கள்... இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுத்த அண்ணல் அம்பேத்கர், இந்தியா முழுவதும் பரவி இருந்த இனம் நாகர் இனம் என்றும், நாகர் இன மக்கள் தான் பின்னாளில் திராவிடர்கள் என அழைத்தார்கள என கூறியது இங்கே நினைவு கூரப்பட வேண்டியுள்ளது. 
மேற்குவங்கத்தை 30 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூட அண்ணல் அம்பேத்கரின் வரிகளை ஆமோதிப்பதாகவும், வங்க மண் திராவிட பாரம்பரியம் கொண்டது எனவும் கூறியதன் தொடர்ச்சியாகவே சுகந்து சேகர் ராயின்  பேச்சை கவனிக்க வேண்டியுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, அரசியல் ரீதியாக இந்த சித்தாந்தத்தை கொண்டு செல்ல திரிணாமுல் காங்கிரஸ் முயல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பாஜகவின் அசுர வளர்ச்சிக்கு எதிராக பாரம்பரியம் என்ற விவகாரத்தை அக்கட்சி எடுத்திருப்பதாகவே கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
வலதுசாரி தத்துவத்திற்கு எதிராக தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் வேரூன்றி இருப்பதை நோக்கி மேற்குவங்கமும் பயணப்பட தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. இதை விட முக்கியமாக பங்களா என பெயர் மாற்றுவது குறித்து சுகந்து சேகர் ராய் பேசிய போது மேற்குவங்க பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது கவனிக்க வேண்டியுள்ளது. எனவே பாஜகவிற்கு எதிரான குரல் என்பது பாரம்பரியம் என்ற வேரை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.  

தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! June 29, 2019

Image
சென்னையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தவறிய தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை துறைமுக பகுதியில் நடைபெற்றது. 
திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.பி. தயாநிதி மாறன், திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். 
பிராட்வே சாலையில் தொடங்கிய இப்பேரணியில்,  தண்ணீர் பிரச்னையை தீர்க்க தவறிய அதிமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். இந்த பேரணியில், ஏராளமான பெண்கள் காலி குடங்களை ஏந்தி, ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.  
அப்போது பேசிய கனிமொழி, உலகம் முழுவதும் தமிழகத்தின் அவல நிலையை உற்று நோக்கும் நிலையில் தமிழக அரசு நாடகமாடி வருவதாக குற்றம்சாட்டினார். 
கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தாலும் பிரதமர் மோடிக்கு பயந்து தண்ணீர் பெற மறுத்துவிட்டதாக கனிமொழி விமர்சித்தார்.
credit ns7.tv

ஒரு மாதத்திற்கு பிறகு அதிகரித்துள்ள வைகை அணையின் நீர்வரத்து...! June 29, 2019

கேரள மாநிலத்தில் பெய்த தொடர் மழை  காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென்மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் வைகை அணை முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைகை அணை நீர் மட்டம் 31. 04 அடியாக உள்ளது. 
வைகை அணை
அதன்படி, அணையின் நீர் இருப்பு 412 மில்லியன் கன அடியாகும். தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  
credit ns7.tv

காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம்! June 29, 2019

credit ns7.tv
Image
மதுரையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்வலைகளை உள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்காக மணிகண்டனை, கரிமேடு காவல்துறையினர் நேற்று மாலை காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 
இந்நிலையில் மணிகண்டனுக்கு, நேற்று நள்ளிரவு திடீரென உடல்நிலை சரியில்லாததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவரது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டனின் உறவினர்கள், விசாரணைக்காக அழைத்து சென்ற நபரை, காவல்துறையினர் அடித்து கொன்றதாக குற்றம்சாட்டி, காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கனமழை எதிரொலி - அடுக்குமாடி கட்டடம் இடிந்து கோர விபத்து...! June 29, 2019

Image
மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழையால் அடுக்குமாடி கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 
மகாராஷ்டிர மாநிலம் புனே, தானே உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 
விபத்து
இந்நிலையில், புனே அடுத்துள்ள கோந்த்வா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளாதில், 15 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டடத்தின் மற்றொரு பகுதியில் ஏராளமான குடிசைகளில் மக்கள் வசித்து வந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 4 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். 
News7 Tamil
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv

வெள்ளி, 28 ஜூன், 2019

தமிழகம் முழுவதும் 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 61 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்! June 28, 2019

Image
தமிழகம் முழுவதும் 8 மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் உட்பட 61 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது  தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிற்கு பதிலாக அருண் பாலகோபாலன் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பாண்டியராஜன் கரூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
கடலூர், திருவள்ளூர், நீலகிரி, நாகப்பட்டினம், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திற்கு ஸ்ரீஅபினவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அரவிந்தனும், நீலகிரி மாவட்டத்திற்கு கலைச் செல்வனும் புதிய எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ராஜசேகரனும், சிவகங்கை மாவட்டத்திற்கு ரோஹித் நாதன் ராஜகோபாலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கண்ணனும் புதிய எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் எஸ்பிக்களாக இருந்த 12 பேர் எஸ்பிக்களாக பதிவு உயர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

credit ns7.tv

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்...! June 28, 2019

Image
பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கத்தின் மகன் உள்ளிட்டோர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில்,  பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பத்தியாளர்களின் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்றவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

credit ns7.tv

காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பதற்கு 1% வாய்ப்பு கூட இல்லை!” - வீரப்ப மொய்லி June 28, 2019

Image
2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாதது தேசிய அரசியலில் அதிர்வலைகளையும், காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தையும் பறைசாற்றியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னதாக நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலக கூடாது என்று அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தனது ராஜினாமா முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவே தெரியவந்துள்ளது. 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மொய்லி இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “என்ன நடக்கும் என்பதற்கு உறுதி கூற முடியாது, எனக்கு தெரிந்த வகையில் காங்கிரஸ் தலைமையை ஏற்க ராகுல் காந்திக்கு 1% கூட வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. 
காங்கிரஸ் காரியக் கமிட்டி மீண்டும் கூடும்போது, ராகுலின் ராஜினாமா குறித்து விவாதிக்கப்படும், அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றால் வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்றார்.
முன்னதாக மூத்த தலைவர் சசி தரூர், இந்த விவகாரம் குறித்து கூறுகையில் தேர்தல் தோல்வியை அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக தன்னுடைய தோல்வியாகவே கருதி அதற்குதகுந்தாற் போல செயல்படுகிறார் என்றார்.
இதனிடையே நேற்று ஹரியானா தலைவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகிவிட்டதாகவும், மற்ற தலைவர்களை என்னால் விலக கூற முடியாது என்றும் அது அவரவர் விருப்பம் என்றும் கூறினார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகுவது ஏறக்குறைய உறுதியாகியிப்பதாகவே தெரிகிறது.

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து ரூ.40க்கு விற்பனை செய்யும் பேராசிரியர்..! June 28, 2019

Credit Ns7.tv
Image
ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர், பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் சதீஷ் என்பவர், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து பெட்ரோல் தயாரித்துவருகிறார். Plastic pyrolysis என்ற முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பெட்ரோல் தயாரித்துவரும் இவர், பல தொழிற்சாலைகளுக்கு அதனை 40லிருந்து 50 ரூபாய்க்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்.
பிளாஸ்டிக் பொருட்கள்
மேலும், இதனை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேராசிரியர் சதீஷிடம் கேட்டபோது, சுற்றுசூழலை பாதுகாக்கவே இதுபோன்ற புதிய முயற்சியை செய்துள்ளதாகவும் லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், 400 கிலோ பிளாஸ்டிக் மூலம் 400 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கமுடியும் எனவும் Plastic pyrolysis என்ற முறை மூலம் பிளாஸ்டிக்கை, பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஷ்-ன் இந்த புதிய முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. 

காஷ்மீரில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் நேருதான்: அமித்ஷா June 28, 2019


Image
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத செயல்களுக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த பின்னர் பேசிய அவர், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் தற்போது தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். 
குடியரசு தலைவர் ஆட்சி என்பதை ஒரு போதும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியது இல்லை என்றும், இதுவரை 93 முறை அதனை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். 
ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை என பெருமிதம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் தான் மத்திய அரசை கண்டு பயப்படுவதாகவும் மக்கள் யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்தார். 
மேலும், காஷ்மீரில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் நேருதான் எனவும் அவர்தான் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டார் எனவும் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதுமட்டுமல்லாமல், மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்தது வரலாற்றுப்பிழை எனவும் பட்டேலின் பேச்சை அலட்சியம் செய்து காஷ்மீர் பிரச்சனையை உருவாக்கிவிட்டார். என தெரிவித்தார்.
 
நேரு செய்த பிழைகளால் நாடு பிரச்சனைகளை சந்திக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரிவினையின்போது கொல்லப்பட்டார்கள்; தீவிரவாதம் நாடுமுழுவதும் பரவி விட்டது எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

credit ns7.tv

பொய் செய்திகளை பரப்பும் பிரபலங்கள்! June 28, 2019

Image
பொய்செய்திகள் பரவுவதற்கு பெரும்பான்மையான காரணமாக இருப்பது சோசியல் மீடியாக்களே. குறிப்பாக வாட்சப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவைகள்தான் பொய் செய்திகள் பரவுவதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன. உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும், உண்மையான இந்தியனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற பின்குறிப்புகளோடு பரப்பப்படும் செய்திகள், வீடியோக்கள் அதன் உண்மைத் தன்மை ஆராயப்படாமல் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் ஷேர் செய்யப்படுகிறது.
உண்மைதன்மையை ஆராயாமல் பொய்யான செய்திகளை பரப்புவதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. கடந்த இருநாட்களுக்கு முன், உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண், அது குறித்து புகாரளிக்கச் சென்ற போது, அந்த காவல் நிலைய அதிகாரி எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டுமென்றால் தன்னோடு உறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று அந்த பெண்ணை வற்புறுத்தினார் என்ற செய்தி வேகமாக பரவியது. அந்த செய்தி உண்மையல்ல என்று பலர் விளக்கமளித்திருந்த போதும், பாடகி சின்மயி அதை ஷேர் செய்திருந்தார்.
சின்மயியின் ட்விட்டை சுட்டிக்காட்டி, பிரபலங்களும் இது போன்ற பொய்செய்திகளை பரப்புகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை வருத்தத்தை தெரிவித்திருந்தது. மேலும் அந்த சம்பவம் நடைபெற்றது 2017ல் என்றும் அது ஏன் 2019ல் பரப்பப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

பொய்செய்தியை ஷேர்செய்ததற்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி உடனடியாக அந்த ட்விட்டை டெலிட் செய்தார்.
இந்நிலையில், மழை மேகங்களை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நாசா உருவாக்கியுள்ளது. உலகம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள் என்று ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது.
அந்த வீடியோ உண்மையல்ல என்றும், அந்த வீடியோவில் இருப்பது, ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்ட RS-25 இஞ்சினை நாசா பிப்ரவரி 21 2018ல் ஸ்டென்னிஸ் வான்வெளி நிலைய ஆராய்ச்சி மையத்தில் வைத்து சோதித்து பார்த்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று விளக்கமளிக்கப்பட்டது. அதோடு அந்த எஞ்சினில் பயன்படுத்தப்பட்டது திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் என்றும் அது இரண்டும் சேரும்போது H20 கிடைக்கும். அந்த வீடியோவில் பார்த்தது எளிய வேதிவினைகள் மூலம் நடைபெறும் ஒரு விளைவுதான் என்று கடந்த 2018ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை விளக்கமளித்திருந்தது.
அந்த வீடியோ தற்போது மீண்டும் ட்விட்டரில் வைரலாக ஆரம்பித்திருக்கிறது. அந்த வீடியோவை ஷேர் செய்திருப்பது பாலிவுட் சினிமா உலகின் பெரும் நட்சத்திரமான அமிதாப் பச்சன் தான். இதுபோன்ற ஒன்று இந்தியாவுக்கு கிடைக்குமா? அதாவது இப்போதே, இப்போதே.. ப்ளீஸ் என்று கருத்து தெரிவித்து ஷேர் செய்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் மட்டுமல்லாமல், இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏர் மார்ஷெல் அனில் சோப்ராவும் அந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
சமீப காலமாக குறைவாக பெய்யும் மழையால் இந்தியா தண்ணீர் பிரச்சனையை சந்திக்கிறது. தண்ணீர் பிரச்சனை தீர ஏதாவது செய்தாக வேண்டும் என்ற இவர்களது எண்ணம் புரிந்துக்கொள்ளக்கூடியது என்றாலும் பொய் செய்திகளை பரப்புவது முறையல்ல.
சாதாரண ஆட்கள் பொய்செய்தியை பரப்பும் போது ஏற்படும் தாக்கத்தை விட, பிரபலங்கள் பகிரும் செய்திகள் அதிகம் பேரை சென்றடையும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அமிதாப் பச்சன் பகிர்ந்திருக்கும் வீடியோவை 5000+ நபர்கள் ரிட்வீட்டும், 28000+ பேர் லைக்கும் செய்திருக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்களை விட, அதன் உண்மைத் தன்மை தெரியாமல் அதை பலர் நம்புவதற்கே வாய்ப்புகள் அதிகம். பொய்செய்திகள் பரவ தாங்கள் காரணமாக இருக்காமல், பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பு.
credit ns7.tv