நாகையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை, கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகை அடுத்த சால்ட்ரோடு பகுதியில் உள்ள குடோனில் கடலோர பாதுகாப்பு குழும புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். அங்கு இரண்டாயிரத்து 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், முருகானந்தம், ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதன் மதிப்பு 1 கோடி ரூபாய் என்றும், தூத்துக்குடி வழியாக வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி சின்னசாமி, கடல் அட்டைகளை கடத்த முயன்றவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.