Authors
150 அடி ஆழம் கொண்ட கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ளது பக்வான் புரா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சுகிந்தர் சிங் என்பவரின் நிலத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றிற்குள் சுக்விந்தரின் 2 வயது மகன் ஃபதேவீர் சிங் கடந்த ஜூன் 6ம் தேதி மாலை 4 மணியளவில் தவறுதலாக விழுந்துள்ளார். கோணிப்பையால் மூடி வைக்கப்பட்டிருந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மீது குழந்தை கால்வைத்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றின் ஆழம் 150 அடி ஆகும். இது 7 ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டப்பட்டு கைவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்த போது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சவால் நிறைந்த இந்த பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 25 பேரும், காவல்துறையினர் 400 பேரும், தேரா சச்சா சவுதா என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 200 பேரும், துணை ராணுவப் படையினர், கிராமத்தினரும் என சுமார் 700 பேருக்கும் மேற்பட்டோர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 4 நாட்கள் மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் குழந்தை இன்னும் மீட்கப்படாமல் உள்ளது. கடைசியாக கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் குழந்தையின் அசைவு தென்பட்டுள்ளது. அதன் பின்னர் எந்த வித அசைவும் இன்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு 9 இஞ்ச் விட்டம் கொண்டது, அதற்குள் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்க அதன் அருகே 36 இஞ்ச் விட்டம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றிற்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு, கேமராக்கள் மூலம் குழந்தையின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் உடல்நிலை குறித்து எந்த வித தகவலும் இல்லாத நிலையில் இன்று அக்குழந்தை தனது 3வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. குழந்தையின் நிலை குறித்து எந்த வித தகவலும் இல்லாததால் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.