
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தொடர் இயற்கை சீற்றத்தால், சென்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் மரங்கள் கடும் சேதமடைந்து காணப்படுகிறது. அப்படி சேதமடைந்திருக்கும் மரங்களை சீர்செய்வதற்காக மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார் Green man of India என்று அழைக்கப்படும் அப்துல் கனி.

சென்னையை சேர்ந்த இயற்கை ஆர்வலரான இவர், மரங்கள் மற்றும் சுற்றுசூழல் குறித்த அதீத ஆர்வத்தால் இதுபோன்ற வித்தியாசமான சேவையை தொடங்கி அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறார். சேதமடைந்த மரங்களை சரிசெய்வது மட்டுமல்லாமல், தற்போது இருக்கும் மரங்களை பாதுகாக்கவும் மரத்திற்கான ஆம்புலன்ஸ் கரம் நீட்டுகிறது.

தற்போது தமிழகத்தில் மட்டும் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அப்துல், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த ஆம்புலன்ஸ் சேவை டெல்லியிலும் தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மரங்களுக்கான முதலுதவி, விதைகளை மற்றவர்களுக்கு வழங்குதல், மரங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் எடுப்பது என நீண்டுகொண்டே போகிறது இவர்களது சேவை.
இதுமட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சித்துவருகின்றனர். எங்கு பார்த்தாலும் மாசு என குப்பைகளால் சூழ்ந்திருக்கும் இந்தியாவிற்கு மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவர்களது சேவை மிக தேவையாக அமைந்திருக்கிறது.