கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பனந்தாளில் நடைபெற்ற நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர் பாரூக்கின் நினைவு தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது .
நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர் பாரூக்கின் நினைவு தினம் கடந்த 5 ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய ரஞ்சித், சாதி ஒழிப்புக்காக தமிழ்த் தேசிய அமைப்புகளும், திராவிட இயக்கங்களும் மூர்க்கமாக பணியாற்றிடவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து பேசினார். மேலும், மன்னர் ராஜராஜசோழன் காலத்தில் தான் பட்டியலின மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அக்காலத்தில் வழமையில் இருந்த தேவரடியார்கள் முறை குறித்து சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார் ரஞ்சித்.
இயக்குநர் ரஞ்சித்தின் மேற்கண்ட பேச்சுக்கு பல தரப்புகளிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. முக்குலத்தோர் புலிப்படை, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் ரஞ்சித் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் அவர் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் (சாதி, மத, இன ரீதியிலான மக்களை பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தை தூண்டுதல்) வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.