உத்தரபிரதேசத்தின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டே நாட்களில் தர்வேஷ் யாதவ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி.
உத்தரபிரதேச பார் கவுன்சிலுக்கான தேர்தல் ஜூன் 9ம் தேதியன்று தலைநகர் பிரயாக்ராஜில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தர்வேஷ் யாதவ் என்ற பெண்ணும், ஹரிஷங்கர் என்பவரும் சம அளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
இதன் காரணமாக தலைவர் பதவியில் முதல் 6 மாதங்களுக்கு தர்வேஷ் யாதவும், அடுத்த 6 மாதங்களுக்கு ஹரிஷங்கரும் பதவியில் இருப்பதாக முடிவானது. இதன் மூலம் உத்தரபிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பை தர்வேஷ் யாதவ் பெற்றார்.
இந்நிலையில் தலைவராக பொறுப்பேற்ற தர்வேஷ் யாதவுக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மனிஷ் சர்மா என்ற வழக்கறிஞர் தர்வேஷ் யாதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது, இதில் ஒரு குண்டு அவரது நெற்றிப்பொட்டில் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக மரணமடைந்தார்.
தர்வேஷ் யாதவை துப்பாக்கியால் சுட்ட, வழக்கறிஞர் மனிஷ் சர்மா தன்னை தானே சுட்டுக்கொண்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் வைத்து சக வழக்கறிஞரால் உத்தரப்பிரதேச பார் கவுன்சில் தலைவி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பியின் ஈடாஹ் நகரைச் சேர்ந்த தர்வேஷ் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு முதல் உத்தரபிரதேச பார் கவுன்சிலின் பொறுப்புத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆக்ரா சட்டக்கல்லூரியில் LLB, LLM பட்டங்களை தர்வேஷ் பெற்றுள்ளார்.