சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை எடுத்துரைக்கும் விதமாக ஆயிரக்கணக்கான அரிய தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை மத்திய அரசும், நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை மாநில அரசும் மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு பணிக்காக மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவின் அனுமதியும் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நடைமுறையின் காரணமாக அகழாய்வு பணிகள் தொடங்காமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வு பணியை, அமைச்சர் பாண்டியராஜன் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வில் அமைச்சர் பாஸ்கரன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கீழடியில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வு பணிகள் மூலம் 13 ஆயிரத்து 238 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.