நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரண்டு ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காததால் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் முன்பு மாற்றுத்திறனாளி இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். சாலை விபத்தில் வலது கையில் மூன்று விரல்களை இழந்ததால், 50 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர் என சான்றிதழ் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தும், கையில் உள்ள குறைபாடு காரணமாக மருத்துவம் படிக்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, மருத்துவ குழுவின் மூலம் கல்லுாரியில் படிக்க அனுமதியும் பெற்றுள்ளார்.
எனினும், மருத்துவப் படிப்பு பயில அருண்குமாருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவம் பயில அனுமதிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி இளைஞர், விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தாம் படித்து வாங்கிய அனைத்து சான்றிதழ்களையும் காமராஜர் இல்லத்தில் வைத்து விட்டுச் செல்லப் போவதாகவும், அவற்றால் தமக்கு எந்த பயனும் இல்லை என அருண்குமார் வேதனையுடன் தெரிவித்தார். இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அம்மாணவரை சமரசம் செய்து, அனுப்பி வைத்தனர்.
credit ns7.tv