போலி மினரல் வாட்டர் விற்பனை செய்த 800 பேரை கைது செய்து இந்திய ரயில்வேதுறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரயில் நீர் என்ற பெயரில் ரயில்களில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களை போலவே அதே பெயரில் போலியாக வாட்டர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகளவிலான புகார்கள் சென்றன. ரயில் நீர் மட்டுமல்லாது பிற பிரபல நிறுவனங்களின் பெயரிலும் போலி மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பெரியளவிலான ஆய்வை நாடு முழுவதும் ரயில்வே நடத்தியது. 300க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 48,860 போலி மினரல் வாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த 4 பாண்ட்ரி கார் மேனேஜர்களும் தற்போது சிக்கியுள்ளனர். இத்தகவலை ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீரையும், சுகாதாரமான உணவையும் வழங்குவதில் ரயில்வேதுறை உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரயில்களிலும், நடைமேடைகளிலும் விற்பனை செய்யப்படும் பிரபல வாட்டர் பாட்டில்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டி இந்த குடிநீர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது
credit : ns7.tv