இந்திய விமானப்படையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் CH-47F (I) Chinook ரக ஹெலிகாப்டர்கள் மேலும் இரண்டு இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து CH-47F (I) Chinook, AH-64E Apache மற்றும் AH-64 Apache ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று கையெழுத்தானது. இதன்படி 15 Chinook, 22 AH-64E Apache மற்றும் 6 AH-64 Apache ரக ஹெலிகாப்டர்கள் இந்த ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று போயிங் தெரிவித்தது.
இதன்படி முதல்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிலிருந்து குஜராத்தில் உள்ள முந்த்ரா விமான நிலையத்திற்கு நான்கு CH-47F (I) Chinook ஹெலிகாப்டர்கள் வந்தடைந்தன. இந்த ரக ஹெலிகாப்டர்கள் சண்டிகர் விமானப் படையை மையமாகக் கொண்டு இயக்கப்படும். இவை சியாச்சின் பனிமலை பிரதேசங்களுக்கு தளவாடங்கள் சப்ளை செய்யவும், லடாக்கில் உள்ள சீன எல்லை பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்நிலையில் நேற்றிரவு மேலும் இரண்டு CH-47F (I) Chinook ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளன.
இந்த ஹெலிகாப்டர்கள் மூலம் ஆகாய மார்க்கத்தில் அதிக பாரத்தை தூக்கும் திறனை பெறுவதுடன், போர் மற்றும் மீட்பு பணிகளில் தன்னிகரில்லா வலிமையை இந்திய விமானப் படை பெறும். கடின சீதோஷ்ன சூழல் கொண்ட ஹிமாலய பகுதிகளில் சிறந்த திறனை இந்த ஹெலிகாப்டர்கள் வெளிப்படுத்தவல்லது.
போயிங் நிறுவனத்துடன் இந்தியா இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர் 4 வான்படை பைலட்டுகளும், 4 விமான பொறியாளர்களும் அமெரிக்காவில் உள்ள Delawareக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரக ஹெலிகாப்டர்களை இயக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
credit ns7.tv