நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு, பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும், பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்க வலியுறுத்தப்படும் என்றும், கூறினார்.
பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக இணைந்து, அதிமுகவை வலுப்படுத்த அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, அழைப்பை ஏற்று, பலர் மீண்டும் கட்சியில் இணைந்து வருவதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதியையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.
நீட் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது சட்டப்பேரவைக்கும், தமிழகத்துக்கும் தலைகுனிவு என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கை, கூட்டாட்சி முறைக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது எனவும், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, மீண்டும் மசோதா கொண்டு வர வேண்டும் என்றும்,வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகள் மவுனம் காத்த மத்திய அரசு, நீட் மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக தெரிவித்திருப்பது, கடும் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெற, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
credit : ns7.tv