credit ns7.tv
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தடைகளை தாண்டி, 23 ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவை எம்.பி. ஆவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், அதிமக மற்றும் திமுக சார்பில் தலா 3 பேர் வீதம் 6 உறுப்பினர்கள் இடம்பெற முடியும். அதன்படி, திமுக சார்பில் சண்முகம், வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஆனால், தேசத்துரோக வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்றதால், வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என சந்தேகம் எழுந்தது. இதனால், அவரது மனு நிராகரிக்கப்படலாம் என்பதால் அவருக்கு மாற்று வேட்பாளராக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில், முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர்,
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள், பரிசீலனை செய்யப்பட்டன. அதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. இதன் மூலம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ மாநிலங்களவை எம்.பி. ஆவது உறுதியாகியுள்ளது. இதனை பற்றி வைகோ கூறுகையில், தான் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பலரும் விருப்பம் தெரிவித்ததாக வைகோ கூறினார்.