குடிநீர் கேட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் - பேரம்பாக்கம் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். கிராம மக்களின் சாலைமறியலால் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தச்சூர் கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
credit ns7tv