சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்த நிலையில், தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகளை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான எதிர் நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருகிறது.
இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிக்கொள்ளவும், பொருளாதார நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.
இதனிடையே டெல்லி - லாகூர் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் நேற்று அதிரடியாக அறிவித்தது. இருநாட்டு எல்லையில் உள்ள அட்டாரி (பஞ்சாப்) ரயில் நிலையத்திலிருந்து இந்திய எஞ்சின் கொண்டு அந்த ரயில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் சேவை 1976ல் தொடங்கப்பட்டதாகும்.
சம்ஜவுதா ரயிலை தொடர்ந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் - கராச்சி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக 41 வருட காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை 2006 முதல் தான் இயக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் கூறுகையில், தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் முடக்க உள்ளோம், நான் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த ரயிலும் இயங்காது என்றார்.
credit ns7.tv