வெகுவிரைவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை எட்டப்போகிறது. ஆபரணத்துக்காக பயன்படுத்தப்படும் உலோகத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஒரு பவுன் தங்கத்தின் விலை 70 ரூபாய் மட்டுமே. இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2009ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 11,600 ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டுள்ளது. ஆனால், பத்தே ஆண்டுகளில் அதாவது இன்று தங்கத்தின் விலை 29,808 ரூபாய்.. இது இன்னும் ஓரிரு நாட்களில் 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என்று கணிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்...
வரலாறு காணாத தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. வெறும் நகைக்காக மட்டுமே தங்கம் பயன்படுத்தப்படுவதில்லை. பல்வேறு நாட்டு மக்களும் தங்க நகைகளை வாங்குகிறார்கள். குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் வர்த்தகர்கள் லாப நோக்கில் தங்கத்தை வாங்கி, விற்று லாபம் பார்க்கிறார்கள். 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை இருமடங்காக்கி இருக்கிருக்கின்றன. இதனால் தங்கத்தின் நுகர்வு அதிகரித்துள்ளது.
மேலும், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்கள் கரன்சிகளின் மதிப்பைக் குறைத்துக்கொள்கின்றன. இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது. மேலும், உலகப் பொருளாதார மொத்த வளர்ச்சி விகிதம் 3.6 விகிதத்திலிருந்து 3.5 ஆகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையால், தங்கத்தின் மீதாக முதலீடுகள் உலகளவில் அதிகரித்துள்ளன. இதையும் விலை உயர்வுக்கு காரணமாகச் சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
‘world gold council’ தகவலின்படி, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, பிற நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 480 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் மொத்த இருப்பை 592 டன்னாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். சர்வதேச அளவில் இந்த சிக்கல்கள் என்றால் உள்நாட்டில், 2019-20 ம் நிதி ஆண்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 10-15 சதவீத அளவிற்கு தங்கம்தான் அங்கம் வகிக்கிறது. உலகின் முக்கிய வர்த்தக பொருட்களில் ஒன்றான தங்கம் இன்னும் 10 ஆண்டுகளுக்குப்பிறது, 2019 ம் ஆண்டில் இவ்வளவு குறைவாக தங்கம் விற்கப்பட்டுள்ளதா என்று நாமே கேட்போம்... அந்த அளவிற்கு தங்கத்தின் விலை விண்ணை முட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
credit ns7.tv