Breaking News
Loading...
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

Info Post

Image
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பீஃப் சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் ரெஹ்னா சுல்தானா. இவர் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தனது பேஸ்புக் கணக்கில் “இன்று மாட்டுக்கறி சாப்பிட்டு பாகிஸ்தானின் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள். நான் என்ன சாப்பிடவேண்டும் என்பது என் ரசனையைப் பொறுத்தது. மாட்டிறைச்சி குறித்து நீங்கள் கேட்டதை வைத்து அதை சர்ச்சையாக்காதீர்கள்.” என்று எழுதியிருந்தார்.
இந்த நிலைத்தகவலை தற்போது பக்ரித் பண்டிகைக்காக ரெஹானா சுல்தானா புதிதாக எழுதியது போல உள்ளூர் இணையதளம் ஒன்று செய்தியாக வெளியிட்டது. இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் பலர் கண்டனத்திற்கு உள்ளானதோடு, ரெஹ்னா சுல்தானாவை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதன் காரணமாக இணையத்தை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துதல் உள்ளிட்ட தகவல்தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரெஹ்னா சுல்தானாவிடம் இது பற்றி கேட்டபோது, அந்த நிலைத்தகவலை தான் தான் பதிவிட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த பதிவை சமீபத்தில் வந்த பக்ரித் பண்டிகையின்போது இடவில்லை என்று மறுத்துள்ளார். கடந்த ஜூன் 2017ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது விராட் கோலி டக் அவுட் ஆன விரக்தியில், கிரிக்கெட் ரசிகையான தான் அந்த பதிவை இட்டதாக தெரிவித்துள்ளார். எனினும், தான் அதுபோன்ற பதிவை இட்டிருக்கக் கூடாது என்றும், தான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்று உணர்ந்ததால், அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டதாகவும் ரெஹ்னா சுல்தானா தெரிவித்துள்ளார்.
அதோடு, தேசிய குடிமக்கள் பதிவேடு (அசாமில் நடத்தப்பட்ட மக்கள் குறித்த கணக்கெடுப்பு வெளிமாநில மக்கள், வெளிநாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கை என குற்றச்சாட்டு எழுந்தது) பற்றி விமர்சனம் செய்யப்பட்ட கவிதை ஒன்றை ஷேர் செய்ததற்காக ரெஹ்னா சுல்தானா உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த மாதம் தான் பதிவு செய்திருந்தனர். 
தனது சமூக பணிகளை தடுக்கும் நோக்கிலேயே, இரண்டு ஆண்டுகளுக்கு பதிவிட்டு, உடனே அழித்த பதிவை மீண்டும் எடுத்து அதை பிரச்சனையாக்குகின்றனர் என்று ரெஹ்னா சுல்தானா குற்றம்சாட்டியுள்ளார். அதோடு, “தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருக்கும் குடிமக்களுக்காகவும் தான் நான் உழைக்கிறேன், அவர்களுக்காக நான் அடிக்கடி உதவியும் இருக்கிறேன். என்னை விரக்திக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை சர்ச்சையாக்கியிருக்கின்றனர். அதோடு, நான் ஷேர் செய்த கவிதையில் சர்ச்சைக்குரிய எதுவும் இல்லை” என்று ரெஹ்னா சுல்தானா தெரிவித்திருக்கிறார்.
“கவுகாத்தி நகரின் கமிஷனர் இந்த வழக்கை விசாரிக்கிறார். சமூக வலைதளங்கள் பொய்யான செய்திகளை பரப்புவதை தடுக்கவும், வன்முறை தூண்டும் பதிவுகளை இடுவதை தடுக்கவும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்; உள்ளூர் காவல் நிலையங்களுக்கு இது போன்ற பதிவுகள் இடுபவர்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்றூ டிஜிபி குலதார் சைகியா தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு இட்ட பதிவுக்காக தற்போது வழக்கில் சிக்கியிருப்பது சமூகவலைதளவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

credit ns7.tv