சனி, 17 ஆகஸ்ட், 2019

உங்களுக்கு வெக்கமாவே இல்லையா? : கர்ப்பிணியை அவமானப்படுத்திய மாவட்ட ஆட்சியர்! August 16, 2019


உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசவத்திற்கு வந்த பெண்ணை அவமரியாதை செய்யும் விதமாக மருத்துவமனையின் டிஎம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக, அங்குள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு சரியான படுக்கை வசதி செய்துதரவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அந்த வழியே வந்த மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம், தனக்கு படுக்கைவசதி செய்துகொடுக்கவில்லை என்று அந்த கர்ப்பிணி புகார் தெரிவித்தார்.
அந்த பெண்ணுக்கு படுக்கை வசதி செய்து தருவதற்கு பதிலாக, “உங்களுக்கு இது எத்தனையாவது குழந்தை என்று கேள்வி எழுப்பினார்? நான்காவது குழந்தை என்று அந்த பெண்மணி பதிலளிக்க, உங்களுக்கு எதற்கு நான்கு குழந்தைகள்? இரண்டு போதாதா? நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வெக்கமாக இல்லையா? என்று சரமாரியாக அந்த பெண்ணிடம், மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதவி கேட்ட பெண்ணுக்கு வசதி செய்து தராமல், அவரை அவமரியாதை செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் நான்கு குழந்தைகள் என்பது அதிகமானது; மருத்துவர் அந்த பெண்ணை திட்டியது சரியானதே என்று ஒரு சாராரும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணிற்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்காமல் அவரை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது; மக்கள் தொகையை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறை இது அல்ல என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

நேற்று நடந்த 73வது சுதந்திரதின விழாவின் போது பேசிய பிரதமர் மோடி, “மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வருங்கால சந்ததிகளுக்கு பல வகைகளில் பிரச்சனைகளாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை பெறுவதற்கு முன்பு, குழந்தைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நம்மால் செய்து தர முடியுமா என்று சிந்திக்க வேண்டும். சமூக விழிப்புணர்வு அனைவருக்கும் உருவாக வேண்டும். மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்கு கவலை அளிப்பதாக உள்ளது. யார் அளவான குடும்பம் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு சமூகத்தில் மரியாதை என்றும் இருக்கும். நாட்டு மக்கள் கல்வி பெற்று, உடல்நலத்துடன் இருந்தால் அந்த நாடும் வளமானதாக இருக்கும். யாரெல்லாம் அளவான குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பவர்களாவார்கள். அவர்களுடைய இந்த செயல் தேசப்பற்றையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

credit ns7.tv