செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது..

Credit : diankaran.com 2019-08-05@ 21:37:10










ஸ்ரீநகர்: காஷ்மீரில் சட்டப் பிரிவுகள் 35ஏ மற்றும் 370 நீக்கப்பட்டதையடுத்து, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் சதி காரணமாக, அமர்நாத் யாத்திரைக்கும் மத்திய அரசு தடை  செய்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வெளிமாநில மாணவர்களை உடனடியாக வெளியேறும்படியும் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இன்று ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓட்டுச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகியுள்ளன. காஷ்மீரில் 10 சதவீத இட ஒதுக்கீடு, மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்கள் நிறைவேறின.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. காஷ்மீர் மீதான இந்த அறிவிப்பு அங்கு பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் போராட்டம் வெடிக்கும் என்று காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனவே தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், ஸ்ரீநகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட உமர், முப்தி இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.