புதன், 5 ஆகஸ்ட், 2020

பள்ளிகள் மூடப்பட்டதால் சுமார் 100 கோடி மாணவர்கள் பாதிப்பு: ஐ.நா

கொரோனா தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பள்ளிகளை மீண்டும் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாறியுள்ளது. சில பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும், ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், கொரோனா வைரஸ், கல்விக்கு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியுள்ளதாகவும், புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட இருந்த சுமார் 40 மில்லியன் குழந்தைகள் கொரோனா பாதிப்பால் பள்ளியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே இதன் விளைவாக உலகின் ஒரு தலைமுறை பேரழிவை எதிர்கொள்வதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே உலகம் கல்வி தொடர்பாக ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது. 250 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உலகளவில் சுமார் 23.8 மில்லியன் மாணவர்கள் படிப்பை நிறுத்த வாய்ப்புள்ளது. இதில் ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான மாணவர்கள் அடங்குவர். கொரோனா பரவல் குறைந்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி கல்வி நிலையங்களை மீண்டும் திறக்கலாம். பள்ளிகள் கல்விக்காக பயன்படுவது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு தேவையான சமூகப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்தையும் கொடுக்கின்றன. கல்விக்காக நிதியுதவியை அதிகரிப்பதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்’ இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.