உசிலம்பட்டி அருகே, 500 ஆண்டுகள் பழமையான 8 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மொட்டை மலை பகுதியில் 8 அடி உயரம் 4 அடி அகலம் கொண்ட மிகப் பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல் புலிக்குத்தி நடுகல் என்றும் கூறப்படுகிறது. கடந்த காலத்தில், இந்த பகுதியில் புலிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும், அதை அடக்கி வேட்டையாடிய வீரர்களின் நினைவை போற்றும் வகையில், இது போன்ற நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
மேலும், இந்த பகுதியில் தொழிற்சாலைகள் இயங்கி வந்தற்கு அடையாளமாக மேலும் ஒரு நடுகல்லும், 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதி முழுவதும் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.