இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதிலிருந்து மத்திய அரசு நழுவுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய கல்விக்கொள்கை 2020 என்ற தலைப்பில் காணொலி கருத்து மேடை நடைபெற்றது. மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி, கல்வியாளர்கள் வசந்தி தேவி, இராமானுஜம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், ஊரடங்கைப் பயன்படுத்தி மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது என்று கூறிய மு.க.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதில் பங்கேற்று பேசிய திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கும் விதமாக புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். சமஸ்கிருதம் எதிர்காலத்திற்கான வாழ்வியலை கற்றுத்தருமா? என்பதை விளக்க வேண்டும் என்றும், அடுத்த தலைமுறையை தயார்செய்யும் விதமாக கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.