கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பிறகும், மக்கள் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்க வல்லுநர் எச்சரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில தடுப்பூசி பரிசோதனைகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகும், பொது சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என அமெரிக்க அரசின் மூத்த வல்லுநர் அந்தோணி ஃபாஸி அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால், தடுப்பூசிகளின் செயல்திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியான ஒன்றுதான் என்று அவர் கூறியுள்ளார். அதன் செயல்திறன் 50% அல்லது 60% ஆக கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் தடுப்பூசி 98% சிறப்பாக செயல்படும் என உறுதியாக கூற முடியாது. அதனால் மக்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவைகளை மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் தயாராக இருக்கும். அந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு பில்லியன் தடுப்பூசிகள் தயாராகும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.