சனி, 8 ஆகஸ்ட், 2020

கேரள நிலச்சரிவு - 18 பேர் பலியான சோகம்!

 கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணில் புதையுண்டவர்களில் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில், எப்போதுமே மழைக்கு பஞ்சம் இருப்பதில்லை. அளவுக்கு அதிகமான மழை காரணமாக அவ்வப்போது வெள்ளத்தால் பெரும் சேதங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும், கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கன மழை கொட்டி வருகிறது. கன மழையால், இடுக்கி மாவட்டம் தற்போது ஆபத்தை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

இடுக்கி மாவட்டம் ராஜமலை என்ற பகுதியில் தேயிலை எஸ்டேட்டில், மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சர்வில் சுமார் 80 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்யும் கனமழையால் மண் இளகி, நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்ணுக்குள் புதையுண்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், அங்கு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

 

 

கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, ராஜமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ச்சியாக பெய்யும் மழை, மீட்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல அணைகள் நிரம்பி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, மூணாறில் உள்ள கல்லார்குட்டி அணை திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், வயநாட்டில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தின் நேரியமங்கலம் பகுதியில் மழை வெள்ளத்தில் யானையின் சடலம் அடித்து செல்லப்பட்டது. யானையையே இழுத்துச் செல்லும் அளவுக்கு அங்கு கன மழை கொட்டி வருகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Image

ஆலுவா பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அது கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், ஆலுவா பகுதியில் உள்ள சிவன் கோவில் ஒன்று, முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கேரளாவில் பல இடங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என, அம்மாநில வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக, இடுக்கி, பத்தணம்திட்டா, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் 20 செண்டி மீட்டர் கூடுதலாக மழை பெய்யும் எனவும், வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளையும் கன மழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது