மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம், திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் ஸ்டாலின், ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் எடுத்துரைத்துள்ளார்.
எனவே, மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்து ஆலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று வாரங்களில் முடிவெடுக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை, உடனே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.