தமிழக அரசு அறிமுகப்படுத்திய புதிய காப்பீட்டுத் திட்டத்தில், கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் சங்கம், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விருதுநகர் நிர்வாகி கண்ணன் கூறியதாவது, விருதுநகரை சேர்ந்த ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை ஆன செலவாக, மருத்துவமனை ரூ.4.25 லட்சத்திற்கு பில் வழங்கியிருந்த நிலையில், அவர் தான் சார்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பித்திருந்தார்.இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1.73 லட்சம்மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாங்கள் அரசு ஆணை 290ன்படி, கொரோனா சிகிச்சையின் ஒருபகுதி செலவுக்கான பணத்தை மட்டும் வழங்கியுள்ளோம். கொரோனா தொற்று சிகிச்சைக்கான முழு பணத்தை தாங்கள் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு முழு பணமும் வழங்காமல், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கையில் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கும் விதமாக தமிழக அரசு அரசு ஆணை 280 பிறப்பித்துள்ளது. அதன்படி, மார்ச் 1 முதல் ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொண்ட அரசு ஊழியர்கள், தாங்கள் செய்த செலவை, அரசின் கருவூலத்துறை ஆணையருக்கு எழுத்துப்பூர்வமாக அளித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2020 ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அமல்படுத்தப்பட்டுள்ள புதிய காப்பீட்டுத்திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்படவில்லை மற்றும் நடைமுறையில் இருந்த காப்பீடு திட்டம் 2021 ஜூன் 30ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆணை 279ன் படி, காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவின் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படும் என்ற நடைமுறை தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்வதாக கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.