செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

சென்னை-சேலம் 8 வழிச் சாலையை திரும்ப பெற வேண்டும்: திமுக 3 எம்.பிக்கள் மனு

சென்னை-சேலம் பசுமை விரைவுச் சாலை
திட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திமுகவைச் சேர்ந்த  மூன்று  எம்.பிக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  மனு அளித்தனர்.

சென்னை- சேலம் இடையே 277 கிலோமீட்டர் தூரத்திற்கு எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை தடை செய்யக் கோரியும், மாற்று வழியில் திட்டத்தை செயல் படுத்த கோரியும் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், கள்ளக்குறிச்சி பாரளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி ஆகியோர் கூட்டாக மாவாட்ட ஆட்சியரிடம் மனுவைக் கொடுத்தனர்.

முன்னதாக, சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சூழலியல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

 

 

 

 

தருமபுரி எம்.பி செந்தில் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சுற்றுச்சூழல்   அமைச்சகத்தின் இந்தப் புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்திற்குள் வரும் தருமபுரியைச் சேர்ந்த 16 கிராம சபா  பஞ்சாயத்துக்கள் இந்த திட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டு வரயிருக்கின்றனர் . கேரளாவில் கிராம சபா போட்ட ஒரு தீர்மானம் கோகோ கோலா நிறுவனத்தை வெளியேற்றியது. ஒரு’ Grassroot Governance’ தேவைப்படுது.  சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய நிலைப்பாடை  எதிர்த்து கண்டிப்பாக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் போராடுவோம்” என்று தெரிவித்தார்.

 

சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் இதுகுறித்து கூறுகையில்,“ இந்த சாலைக்காக சுமார் 7,500 ஏக்கர் விலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுமார் 30,000 விவாசய தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், வனப்பகுதிகள் முற்றிலும் அழிந்து போகும் சூழல் உள்ள நிலையல், அரசாங்கம்  இதை தனிப்பட்ட நலன்களுக்காக செயல்படுத்த முயற்சிக்கின்றன. அது கண்டிக்கத்தக்கது,” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை செல்லும் பாதையை அரசு சீர்செய்து தரவேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி. .கெளதமசிகாமணி தெரிவித்தார்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தனி நடைமுறை இருப்பதாகவும், அதனால் நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை” என்று வாதிட்டார்.