உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அரசின் கோப்புகளை தனது ஒப்புதலுக்காக அனுப்பத் தேவையில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவருக்கும் இடையேயான அதிகார மோதல் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கேச் சென்று வழங்கும் திட்டம் உள்ளிட்ட கோப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஒப்புதல் வழங்காததையடுத்து அவரது அலுவலகத்தில் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது டெல்லி அரசில் தன்னிச்சையாக செயல்பட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் மாநில அரசின் முடிவுகளை துணை நிலை ஆளுநரிடம் தெரிவிக்கலாமே தவிர ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் , மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என துணை நிலை ஆளுநர் உறுதி அளித்ததாகக் கூறினார்.
கோப்புகளை தனது ஒப்புதலுக்காக தேவையில்லை என்றும் அரசின் முடிவுகளை தனது பார்வைக்கு தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அனில் பைஜால் தம்மிடம் கூறியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகள் தேங்கிக் கிடப்பது துணை நிலை ஆளுநரின் இந்த முடிவின் மூலம் தவிர்க்கப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.