சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தின் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இடைக்காலமாக தடை விதிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தருமபுரியை சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை வருவாய் துறை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரனைக்கு வந்தது. அப்போது சேலம்- சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிரான பல வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரனையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற வழக்குகள் பொதுநல வழக்குகள் என்றும் ஆனால் நேரிடையாக பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் தாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி சேலம் சென்னை பசுமை வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரனையில் இருக்கும் வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரனை செய்ய மாற்றுவதாக உத்தரவிட்டார். அது வரை நிலம் கையகப்படுத்தும் பணிக்களுக்கு தடை விதிப்பது குறித்து இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறபிக்க முடியாது என தெரிவித்தார்.