வியாழன், 9 ஆகஸ்ட், 2018

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த 4 முதலமைச்சர்கள்! August 9, 2018

Image

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த 4 முதலமைச்சர்களின் உடல்கள் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் முதன்மையான அடையாளங்களில் மெரினா கடற்கரைக்கு என்றுமே முதலிடம் உண்டு. தமிழகத்தின் வரலாற்றை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றிய 4 திராவிட தலைவர்களின் சமாதி, தற்போது அங்கு அமைக்கப்பட்டதன் மூலம் தமிழர்களின் இதயங்களிலும் நீங்காத இடத்தை பெற்று விட்டது மெரினா. திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானதை அடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை, திமுகவினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. ”மெரினா ஃபார் கலைஞர்” என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. 

இதுத்தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தமிழர் தலைவர் என அழைக்கப்படும் கருணாநிதியின் உடல் தமிழர் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட அனுமதி பெறப்பட்டது. அண்ணாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. கடைசி வரை அண்ணாவின் கொள்கைகளின்படியே ஆட்சி செய்தவர் கருணாநிதி. தனது குருவான அண்ணாவின் சமாதியின் அருகேயே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என அவர் உயிரோடு இருந்தபோது கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் ஆசைப்படி, அண்ணாவின் சமாதியின் அருகிலேயே, அண்ணாவின் தம்பியான கருணாநிதியின் உடலும் ராணுவ மரியாதையுடன் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது, காலமானவர்களின் உடல்கள் மட்டுமே இதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டன. ஆனால், முதன்முறையாக முதலமைச்சர் பொறுப்பில் இல்லாத ஒருவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்பற்றபட்டு வந்த பழைய விதிகளை உடைத்து, புதிய விதிகளை புகுத்துபவர் தாம் என்பதை, தன் இறப்பிற்கு பின்னாலும் நிரூபித்துள்ளார் கருணாநிதி. மெரினா கடற்கரையில் முதன்முதலில் சமாதி அமைக்கப்பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தமிழக முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை ஆவார். 1969ஆம் ஆண்டு அவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டது கின்னல் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. 

அவரது உடலானது மெரீனா கடற்கரையின் கூவம் நதிக்கரையோரம் 7.5 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவிடமும் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி அண்ணா சதுக்கமாக அறிவிக்கப்பட்டது. 1996-1998ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சுமார் 2 புள்ளி 75 கோடி மதிப்பீட்டில் அண்ணா சமாதியை கருணாநிதி புனரமைத்தார். 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் அண்ணா சமாதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அண்ணாவை தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே காலமான எம்ஜிஆருக்கும் மெரினாவில் சமாதி அமைக்கப்பட்டது. 1987 டிசம்பர் 24 ஆம் தேதி அவர் உயிரிழந்தை தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் அவரது உடல் மெரினாலில் அடக்கம் செய்யப்பட்டது. 

அவரது நினைவிடத்தின் அருகே அணையா தீபம் ஏற்றப்பட்டு, அவரது திருவுருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கடந்த 2012ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்படவே, 8 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவரும் முதலமைச்சராக இருந்தபோதே காலமானதால் அவரது உடலும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக அறியப்பட்ட அவர், எம்ஜிஆர் சமாதிக்கு அருகேயே இடம்பிடித்தார். அவரது சமாதி அமைந்துள்ள இடத்தில் நினைவிடமும், மணிமண்டபமும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்தான்,  கருணாநிதியின் உடலும் மெரினாவில் அவரது அரசியல் ஆசானான அண்ணாவின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நினைவிடம் அமைக்க 1.23 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாம் உயிரோடு இருந்தபோது, போராடி தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற்று தந்த கருணாநிதி, இறந்த பின்னர் தனக்கான இடத்தையும் போராடி பெற்றுள்ளார்.

திமுக முதன்மை செயலர் துரைமுருகன் கூறுயதுபோல, தமிழக அரசும் மெரினாவில் கருணாநிதிக்கு இடத்தை அளிக்கவில்லை. திமுகவினரும் மெரினாவில் இடம் கேட்கவில்லை. கருணாநிதியே தனக்கான இடத்தை தானாகவே மெரினாவில் எடுத்துக்கொண்டுள்ளார்.