ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

​வணிகம் தலைதூக்குதலால் காடுகள் வனப்பை இழந்து விட்டதா? August 12, 2018

Image


யானை - மனித மோதல்களால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 100 யானைகள் மனித மோதல்களால் உயிரிழந்துள்ளன. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் தெரிவித்த புள்ளிவிபரம் இது. 

யானைகள் தொடர்பான செய்திகள் நமக்கு புதிதல்ல யானைகள் ஊருக்குள் புகுந்து விட்டன, யானை தாக்கி ஒருவர் பலி, மின்வேலி தாக்கி யானை பலி, யானையை காட்டுக்குள் விரட்ட போராடும் வனத்துறையினர் போன்ற செய்திகளை தினம் தினம் நாம் கடந்து செல்கின்றோம். 

உண்மையில் குடியிருப்பு பகுதியில் யானைகள் புகுந்து விட்டதாகவும், குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் போன்ற செய்திகள் உண்மையா? யானைகள் மனித மோதல்களுக்கு யார் காரணம்?

இயல்பாகவே யானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை தங்கள் பகுதியில் வறட்சி ஏற்பட்டால் அங்கிருந்து இடம் பெயர்வது அவற்றின் வாடிக்கை அவ்வாறு இடம் பெயர்வதற்கு ஒரே பாதையை பயன்படுத்துகின்றன யானைகள். இதற்கு வலசைபாதை என்று பெயர் 

இந்த வலசை பாதைகள் குடியிருப்பு பகுதிகளாக மாறும் போது தான், குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து விட்டதாக செய்திகள் வருவதும் இயல்பாகி விடுகிறது. காடுகள்  விலங்குகளுக்கானவை; அங்கு உல்லாச விடுதிகள் கட்டுவது என்ற மனித ஆசையின், அதீத நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடு. இவ்வாறு காட்டு விலங்குகளின் அந்தரங்கத்தில் தலையிடுவது போன்ற செயல் என்பதை நாம் உணரவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் சீகூர்பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ள வணிக நோக்கிலான 27 ரிசார்ட் வளாகங்களில் உள்ள 275 கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கும் பணி கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த செய்தியே யானை வழித்தடங்கள் மனிதர்களால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம்.

பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தவரை, அவர்கள் விலங்குகளுடன் இசைந்த வாழ்க்கை வாழ்ந்ததாக கூறும் சூழலியாளர்கள், எப்போது வணிகம் தலைதூக்க தொடங்கியதோ அப்போதே காடுகள் வனப்பை இழக்க தொடங்கி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மனிதனின் அதீத ஆசையால் தங்களின் வாழ்விடத்தை இழந்து திரிகின்றன காட்டு யானைகள் இந்த யானைகள்தான் குடிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டதாக தினம் தோறும் கூறி கொண்டிருக்கிறோம். 

வனப்பகுதிகளை வளமையுடன் வைத்து கொள்வதன் மூலமாகவும், வனப்பகுதிகளுக்குள் கட்டடங்கள் கட்டுவதை தடுப்பதன் மூலமாவும் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை நம்மால் தடுக்க முடியும். 

மனிதர்கள்-யானை மோதல் நிகழும் போதெல்லாம், யானையை குறை கூறும் நாம் எல்லாம் நினைவில் வைக்க வேண்டிய செய்தி. அவற்றின் வாழ்விடங்களில் தான் குடியிருப்பு என்ற பெயரில் வீடுகள் கட்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று.