தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் நாளை பதவியேற்கவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுகவும், 9 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றின. இதனால், புதிதாக தேர்வாகியுள்ள 22 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்களும், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும், நாளை காலை 11 மணியளவில் பதவியேற்கவுள்ளனர். தலைமைச் செயலகத்தில் உள்ள, சபாநாயகரின் அறையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவையில் திமுக சார்பில் ஏற்கனவே 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால், தற்போது திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. இதேபோன்று, சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும், நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.