திங்கள், 20 மே, 2019

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய விவகாரத்தில் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! May 20, 2019

Image
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கியுள்ளது. 
அரவக்குறிச்சி இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் கடந்த 12ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதூராம் கோட்சே என்றும் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு மத கலவரத்தை தூண்டும் வகையிலும், இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையிலும் உள்ளதாகக் கூறி இந்து முன்னணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், கடந்த 14ம் தேதி அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன் அடிப்படையில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், எனவே, அவர் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 
இதையடுத்து, இந்த வழக்கில் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிபதி புகழேந்தி இன்று உத்தரவிட்டார். அடுத்த 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்க அளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும், இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் கமல்ஹாசனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.