பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை எதிரொலியாக வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் 300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதை தேர்தல் ட்ரெண்டுகள் அனைத்தும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவிருப்பதையே காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கையின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் பாஜக முன்னிலை பெற்று வந்ததை தொடர்ந்து இன்று காலை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்தது. பின்னர் மேலும் 400 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் பங்குசந்தையின் சென்செக்ஸ் முதல் முறையாக 40,000 புள்ளிகளை கடந்து வரலாறு படைத்துள்ளது. அதே போல தேசிய குறியீட்டு எண்ணான பிஎஸ்இ 12,000 புள்ளிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்த இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 69.66 ரூபாயாக உள்ளது