மதுரை வைகை ஆற்றில் திடீரென கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக்கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர் வைகை ஆற்றில் மைய மண்டபம் பகுதி அமைந்துள்ள கீழதோப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருமானம் ஈட்டி வருவதாக புகார் எழுந்தது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்காலிகமாக பாதை அமைத்து திடீரென சிலர் வைகை ஆற்றுக்குள் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வைகை ஆற்றுக்குள் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாகனங்கள் இறங்கா வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தி வைகை ஆற்றைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.