செவ்வாய், 14 மே, 2019

வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்....பழங்களின் விலை கிடுகிடு உயர்வு...! May 14, 2019

Image
தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பழங்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த பழங்களை, நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களால் வாங்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான். கத்திரி வெயிலின் தாக்கம், போதிய மழை இல்லாதது ஆகிய காரணங்களால், பழங்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தர்பூசணி, கிர்னி உள்ளிட்ட பழங்களின் விலை கடந்த 2 வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறுகளை மக்கள் அதிகளவில் விரும்பி அருந்துகின்றனர். இதன் காரணமாக, சாலையோர பழக்கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், பழங்களின் விலை உயர்வு காரணமாக, பழச்சாறு கடை நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழங்களின் விலை உயர்வு ஒருபுறம் வியாபாரிகளை அச்சுறுத்தும் அதே நேரத்தில், பழங்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் விலை உயர்வை காரணம் காட்டி வாங்குவதற்கு யோசிப்பதால், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தர்பூசணி, கிர்னி, முலாம்பழம் ஆகியவை மட்டுமே அதிகளவில் விற்பதால், மாம்பழம், அண்ணாச்சி போன்றவற்றின் விற்பனை சற்றே மந்தமடைந்துள்ளதாகவும் பழ வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, அதிக விலை கொடுத்து வாங்கி வைத்த பழங்கள் கூட, தேக்கநிலை காரணமாக அழுகி விடுவதால், இழப்பை சந்திப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஓரளவு மழை பெய்து, பழங்களின் வரத்து அதிகரித்தால் மட்டுமே, விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதுடன், பழ வியாபாரிகளுக்கும் நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது.