சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு, இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர், இதனை தெரிவித்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளைப் போன்று சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-ல் இடம் பெற்ற ஷரத்தை காரணம் காட்டி, தமிழக அரசு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தியது.
பின்னர், மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கொண்டுவரப்பட்ட திருத்தம் காரணமாக நடப்பாண்டில், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் சூழல் உருவானது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது உறுதியாகியுள்ளது.