சாதி, மத அடையாளத்துடன் உள்ள கட்சிகளின் பெயர்களை மாற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய, இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், சாதி, மத, இன, மொழி ஆகியவற்றை அடையாளப்படுத்தும் நோக்கில் பெயர்களைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள், தங்கள் பெயர்களை மாற்ற உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மேலும், தேசிய கொடியைப் போன்ற கொடியை கட்சிக் கொடியாகக் கொண்டுள்ள கட்சிகள், அதனை 3 மாதங்களுக்குள் மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.