பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த, கோபி கிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம், 4 வயது சிறுமியை பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் எனவும், மாணவர்களின் பயணத்தை பெற்றோர் இணையதளம் மூலம் கண்காணிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும், எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, பள்ளி வாகனங்களில் சிசிடிவி பொருத்துவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.