சனி, 25 மே, 2019

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு! May 25, 2019

Image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பாசுரம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் கைகலப்பில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது. 
இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நடைபெறும் சுவாமி வீதியுலாவின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவு ஐயங்கார்கள் வேத மந்திரங்களையும், பாசுரங்களையும் பாடிச் செல்வது வழக்கம். 
இன்று நடைபெற்ற வீதியுலாவின் போது, திருக்கச்சி நம்பி தெரு பகுதியில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது, தென்கலை பிரிவினர், திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முற்பட்டதாக தெரிகிறது. வடகலை பிரிவினரும், கோயில் அர்ச்சகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
திருவிழாக்களின் போது, இரு பிரிவினரும் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருவதாகவும், கோயில் நிர்வாகமும், காவல்துறையும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.