அடிப்படை வசதிகள் இல்லாததால், தமிழகத்தில் 92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையின் போது மாநில பல்கலைக்கழகங்கள் மூலமாக, இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும். தமிழகத்தில் செயல்படும் கல்லூரிகள் இந்த அனுமதியை பெறும் முன், அண்ணா பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு நடத்தும்.
இதில், இந்தாண்டு விண்ணப்பித்த 92 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 92 பொறியியல் கல்லூரிகளின் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் பாதியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.






