புத்தகப் பை மற்றும் மதிய உணவு எடுத்துச்செல்லும் பைகளை வாங்கும்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோரை வற்புறுத்தக்கூடாது என்று, தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாடப்புத்தகங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், சீருடைகள், காலணி, புத்தக பை மற்றும் மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு, ஐந்தாயிரம் ரூபாயும் செலுத்தும்படி சுற்றறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து, பெற்றோர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்குப் பதில், ஐந்தாயிரம் விலையுடன் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகம் வழங்குவதால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்படுவதாக, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை பள்ளி நிர்வாகம் விற்கலாம் என்று கூறினார். ஆனால், பிற பொருட்களை வாங்கும்படி, பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது, என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் பத்தாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.