திங்கள், 27 மே, 2019

தோல்விக்கு லல்லுவும் அவரது மகனுமே பொறுப்பு - தலைமைக்கு எதிராக உள்கட்சி எம்.எல்.ஏ பாய்ச்சல்! May 27, 2019

Image
ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரில் பெற்ற மோசமான தோல்விக்கு கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் யாதவும், அவரது மகனுமே பொறுப்பு என அக்கட்சியில் எம்.எல்.ஏ ஒருவரே கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளன. அந்த வகையில் பீகாரில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (RLD), காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஸ்வாஹாவின் ராஷ்டிரிய லோல் சமதா கட்சி (RLSP), ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்சா (HAM) முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (VIP) ஆகிய 5 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை எதிர்த்து தேர்தலை எதிர்கொண்டன.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 39ல் வென்றது. எதிர் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.
பிகார் சட்டப்பேரவையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஒரு தொகுதியை கூட கைப்பற்ற இயலாமல் மிகவும் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று தேஜஸ்வி யாதவ் தனது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ (காய்கட் தொகுதி) மஹேஸ்வர் யாதவ் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மஹேஸ்வர் யாதவ் கட்சியின் மோசமான தோல்விக்கு தந்தையும், மகனுமே பொறுப்பு என்றார். சொந்தக் கட்சியின் தலைமை குறிவைத்து அக்கட்சியின் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பில் பேசிய விவகாரம் பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத அவல நிலையை ராஷ்டிரிய ஜனதா தளம் இத்தேர்தலில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் மோடி அலையின் போது கூட 4 தொகுதிகளை அக்கட்சி வென்றிருந்தது.
தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குள்ளும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.