சனி, 25 மே, 2019

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜினாமா செய்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள்! May 24, 2019


Image
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் தங்களது பதவியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவகளில் 2014ஆம் ஆண்டை போலவே மிகவும் மோசமான நிலையை காங்கிரஸ் கட்சி இந்த முறையும் எட்டியுள்ளது. சுமார் 15 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒற்றை தொகுதியை கூட அக்கட்சி கைப்பற்ற இயலாமல் அவல நிலைக்கு சென்றுள்ளது. இதிலும் கடந்த முறை போலவே குறைவான தொகுதிகளில் வென்றுள்ளதால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற முடியாத நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தியே தோல்வியை தழுவியுள்ளது நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதன் காரணமாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தலைவர் ராகுலுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
ஃபாதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட ராஜ்பாபர் 4 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் ராஜ்குமார் சஹாரிடம் தோல்வியை தழுவினார்.
என்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இருந்துவிட்டதாக உணர்கிறேன். வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கை வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என ராஜ்பாபர் நேற்று டிவிட்டரில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே காரணத்தை சுட்டிக்காட்டி அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ராவும் இன்று ராஜினாமா செய்தார்.
அதேபோல கர்நாடக காங்கிரஸ் பிரச்சாரக் கமிட்டியின் தலைவர் H.K.பாட்டிலும் ராகுலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்னாயக் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இன்று ராஜினாமா செய்துள்ளார்.