3 வேளை உணவு வசதியுடன் டெண்ட் கூடாரம் அமைத்து, 8 மணி நேர ஷிப்ட்டில் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி நைட் விஷன் வசதியுடன் கூடிய பைனாகுலர் மூலமாக வாக்கு இயந்திரங்களை 24 மணிநேரமாக பாதுகாத்து வருகின்றனர் பகுஜன்சமாஜ் - சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள்.
பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாளை காலை வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாகவும், வேறு பல மோசடிகளும் நடைபெறுவதாக எதிர்கட்சியினர் ஒரே குரலில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி - பகுஜன்சமாஜ் - ராஷ்டிரிய லோல் தளம் கட்சிகள் இணைந்த மகா கூட்டணி தொண்டர்கள் ஒன்றிணைந்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை கூடாரம் அமைத்து கண்காணித்து வருவது தெரியவந்துள்ளது.
அதிலும் முதல் கட்ட தேர்தல் தொடங்கிய ஏப்ரல் 11ம் தேதி மாலை 6.30 மணியில் இருந்து மூன்று கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் 18 பேர் ஒருவர் மாற்றி ஒருவர் என கூடாரம் அமைத்து இரவு பகலாக பைனாகுலர் மூலமாக கண்காணித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வேளை உணவு வசதி செய்யப்பட்டுள்ளது.
உ.பியின் மீருட் தொகுதியில் உள்ள பார்தாபூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களை இவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதற்காக வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எதிரில் இவர்கள் டெண்ட் கூடாரம் அமைத்துள்ளனர். இந்த டெண்ட்டில் படுக்கை, பேன் வசதி, உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் லைவ் ஸ்டீரீமிங்கை இந்த டெண்ட்டில் உள்ள தொலைக்காட்சி திரையில் இவர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எந்த வகையிலான முறைகேட்டையும் தடுக்கும் வகையில் இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு வாக்கி டாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.
கண்ணும் கருத்துமாக வாக்கு இயந்திரங்களை இவர்கள் பாதுகாத்து வருவதற்கு தேர்தல் அதிகாரிகளும் நல்ல முறையிலான ஆதரவை கொடுத்து தருவதாக அக்கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.
வாக்கு இயந்திரங்களில் முறைகேடு குறித்து 2009 முதலே குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தாலும் கடந்த இரண்டு தேர்தல்களில் தான் அவை கவனம் பெற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.