புதன், 22 மே, 2019

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி கல்லூரி மாணவர்கள் சாதனை..! May 22, 2019

Image
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக மாணவர்கள் சிலர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. மேலும் திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு சுமார் 40க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமாக 1800க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகரின் பல்வேறு வழியாகவும் இயக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து லாரிகள், கண்டெய்னர்கள் ஆகிய வாகனங்களும் திருச்செங்கோடு நகரின் வழியாகத்தான் செல்கின்றன. இதனால் திருச்செங்கோட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியமால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 
இந்நிலையில் திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து புதிய கண்டுபிடிப்பினை நிகழ்த்தியுள்ளனர். சில கிலோ மீட்டர்களுக்கு முன்பே எல்சிடி டிஸ்பிளேயர்கள் மூலம் போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
இந்த கருவி மூலம் போக்குவரத்து நெரிசலை முன்பே அறிந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்வதன் மூலம் நேரமும் எரிபொருளும் வீணாவதும் தடுக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்செங்கோட்டில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.