இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நோக்கி ஹவுதி புரட்சியாளர்கள் ஏவிய இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது.
மெக்காவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தயிப் மற்றும் ஜெட்டா நோக்கி வந்த அந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. ஏமன் அதிபர் மன்சூருக்கு எதிராக செயல்படும் ஹவுதி புரட்சியாளர்கள், தொடர்ந்து உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏமன் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரசு தனது படைகளை ஏமனுக்கு அனுப்பி ஹவுதி புரட்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 14ஆம் சவுதி நாட்டின் எண்ணெய் நிறுவனத்தை ஹவுதி புரட்சியாளர்கள் தாக்கினர்.
இதற்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரத்தில் சவுதி அரசு தாக்குதல் நடத்தியது. இதற்கு பழிவாங்கும் வகையில் மெக்கா நோக்கி ஹவுதி புரட்சியாளர்கள் ஏவுகணைகளை ஏவியுள்ளனர். ஆனால் அந்த ஏவுகணை தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.