சனி, 18 மே, 2019

மக்களவைத் தேர்தல் : நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு! May 18, 2019

தமிழகத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நாளை நடைபெறுகின்றன. 
தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதன் பின்னர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 
இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. மேலும், 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி, வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இதனிடையே, மக்களவைக்கான 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவையொட்டி, 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலில், பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபல வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசி தொதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதாவில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா களம் காண்கிறார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜக வேட்பாளராக நடிகர் சன்னி தியோல் போட்டியிடுகிறார். மத்தியபிரதேச மாநிலம், போபாலில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.