Authors
ஒரு கட்டத்தில் மமதா பானர்ஜியின் வலதுகரமாக திகழ்ந்த வரும், நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தேடித்தந்ததில் முக்கிய பங்காற்றியவருமான முகுல்ராயின் மகன், சுப்ரன்ஷூ ராயை 6 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவில் மேற்குவங்காளத்தில் இரண்டாவது கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 40க்கும் அதிகமான வாக்கு சதவீதத்துடன் 18 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்த முறை வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பாஜக, அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
தோல்வியால் துவண்டு போயிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைமையை மேலும் உசுப்பிவிடும் வகையில் அக்கட்சியின் பிஜ்பூர் தொகுதி எம்.எல்.ஏவான சுப்ரன்ஷூ ராய் பாஜகவை போற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக பக்கம் சாய்ந்த முன்னாள் எம்.பி முகுல்ராயின் மகன் ஆவார்.
“எனது தந்தையை நினைத்து பெருமையடைகிறேன். அவர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகிய போது, லட்சக்கணக்கான முகுல் ராய்களை எங்களால் உருவாக்க முடியும் என கேலி செய்தார்கள், ஆனால் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கிய அதே கைகளால் அவர் இன்று கட்சியை உடைத்தெறிந்து விட்டார். ஒட்டு மொத்த மாநிலத்திலும் சாணக்கியராக வலம் வருகிறார்” என்றார் சுப்ரன்ஷூ.
மேலும் 12 தொகுதிகளை இழந்திருப்பது சாதாரணமானது அல்ல, திரிணாமுல் காங்கிரஸ் இது குறித்து செவி சாய்க்க வேண்டும் என்றும் சுப்ரன்ஷூ குறிப்பிட்டார்.
பிஜ்பூர் தொகுதியின் மண்ணின் மைந்தன் நான், அதே போல தான் என் தந்தையும், என் தந்தையிடம் நான் தோல்வியடைந்துள்ளேன். நான் என்னால் முடிந்ததை கட்சிக்காக முயற்சித்தேன், இருப்பினும் மக்கள் என் தந்தையை தேர்ந்தெடுத்துவிட்டனர் என சுப்ரன்ஷூ கூறினார்.
சுப்ரன்ஷூ ராயின் இந்த பேச்சு தொடர்பாக கட்சியின் ஒழுங்கீன குழு கூட்டத்தில் கூடி விவாதிக்கபப்ட்டது, இதில் கட்சிக்கு விரோதமாக பேசியதால் 6 ஆண்டுகளுக்கு சுப்ரன்ஷூ ராயை இடைநீக்கம் செய்ய மமதாவிடம் ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது